தொட்டி(ல்)க் குழந்தை
August 05, 2013
கண்விழித்துப் பார்த்தேன் எந்தாயின் அன்பினில்
கருவறை இருட்டும் காவலாய் அமைய,
விடியலைக் காணும் ஆசையில் நானும்
விண்ணையும் மண்ணையும் முட்டிக் குதித்தேன்!
என்னோடு சேர்ந்து கண்ணீரையும் சுமந்த
எந்தாயின் கருவறையை ஏக்கத்தோடு பிரிய,
பத்து மாதத் தொப்புள்கொடி உறவொன்று
பக்குவமாய் வெட்டப்பட பிறந்தேன் நானே!
தாயின் மடியினில் தவழ்ந்தாட ஆசை,
தகப்பனின் தோள்களில் கதைக்கவும் ஆசை!
எப்படிச் சொல்வேன் என்னைத் தூக்கென்று?
இடைவிடாமல் அழுதேன் தூக்கும் வரையில்!
அகரம் தொடங்கி ஆயுதம் வரையிலே
அன்று முதல் என்றும் என்வாழ்வில்
‘மா’வும் ‘பா’வும் மனத்திலும் பணத்திலும்
மங்காத பாசத்திலும் என்னுடனே எப்போதும்!
அறுசுவை நறுமணம் ஆளுயர வாழையிலை
அங்கங்கே எறிந்திட்ட மக்காத குப்பைகளும்,
கூச்சல் அதிகமாக கண்களைத் திறக்கையில்
கனவுகள்தான் எல்லாம் குப்பைத் தொட்டியில்!